Friday 30 November 2012

சைவத்தமிழ்

சைவம்

1. சைவ சமயம் என்றால் என்ன ?
சிவபெருமானை முழமுதற் கடவுளாக கொண்டு வழிப்படும் சமயம் .(சிவ சம்பந்த முடையது சைவம்).
2. சிவபெருமான் எப்படிபட்டவர் ?
சிவபெருமான் என்றும் உள்ளவர் ,எங்கும் நிறைந்தவர் ,எல்லாம் அறிபவர் , எல்லாம் வல்லவர் .
3. சிவபெருமான் உயிர்களுக்காக செய்யும் தொழில்கள் யாவை ?
1.படைத்தல்மாயையிலிருந்து உடல், கருவிகள், உலகம் ,நுகர்ச்சிபொருள்களைப் படைத்து உயிர்களுக்குக் கொடுத்தல்.
2.காத்தல்படைக்கபட்டதை உயிர்கள் அனுபவிக்க ஒருகால எல்லைவரைகாத்து நிறுத்தி வைத்தல்.
3.அழித்தல்உயிர்களுக்குக் களைப்பு நீங்கும் பொருட்டு படைத்தவைகளை மீண்டும் மாயையில் ஒடுக்குதல்.
4.மறைத்தல்உயிர்கள் பக்குவம் பெறுவதற்காக சிவபெருமான் தன்னை மறைத்து உலகத்தை காட்டல் .
5.அருளுதல்பக்குவம் அடைந்த உயிர்களுக்கு அருளை வழங்கி தன் திருவடியில் சேர்த்தல்.
4.சிவபெருமான் ஐந்தொழில்களையும் எதைக் கொண்டு செய்கிறார் ?
தம் சக்தியாகிய உமாதேவியாரை கொண்டு செய்கிறார்.
5. சிவபெருமானின் வடிவங்கள் எத்தனை வகை ?
1.அருவம்- கண்ணுக்கு புலனாகமல் சக்திருபமாய் இருந்து அருளல்(மந்திர ஒலி).
2.அருவுருவம்முகம் ,கை, கால் ,உறுப்புகள் இல்லாமல் தெரிவது(சிவலிங்கம்) .
3.உருவம்முகம் முதலிய உறுப்புகளுடன் தெளிவாக தோன்றுவது (25 மகேசுவரவடிவங்கள்).
6.சைவ சமய சாதனங்கள் எவை ?
திருநீறு , திருவைந்தெழத்து , உருத்திராக்கம் .
7. திருவைந்தெழத்து எத்தனை வகைப்படும் ?
. திருவைந்தெழத்து மூன்று வகைப்படும் .
1.தூல திருவைந்தெழத்துநமசிவாய .
2.சூக்கும திருவைந்தெழத்துசிவாய நம .
3.காரணதிருவைந்தெழத்துசிவயசிவ .
8. மணத்தால் செய்யும் வழிப்பாடுகள் யாவை ?
1.மானதசெபம் ,அகப்பூசை , திலாயம்
9.வாக்கால் செய்யு வழிப்பாடுகள் யாவை ?
திருமுறைகள் ஒதுதல், ஒதுவித்தல் , நாமவளிகூறல் ,வாசகசெபம்.
10.காயத்தால் செய்யும் வழிப்பாடுகள் யாவை ?
ஆலயம்வலம்வருதல் , திருப்பணிசெய்தல் , நந்தவனம்அமைத்தல் , மாலை தொடுத்தல் ,ஆலயத்தை கூட்டி மெழகிடுதல் முதலியன .
11.இறைவனை அடையும் மார்க்கங்கள் எவை?
1.தாச மார்கம்இறைவனுக்கு அடிமை பூண்டியற்றும் நெறியான இம்மார்கம் சரியை எனவும் கூறப்பெறும்.
2.சற்புத்திர மார்கம்மகன் மைநெறி எனக் கூறப்படும் இம்மார்க்கம் கிரியை நெறியாகும் .
3.சகமார்க்கம்தோழமை நெறிஎனப் பெறும் இம்மார்க்கம் யோகநெறி பாற்பட்டதாகும் .
4.சன்மார்கம்ஞானநெறி எனப் பெறும் இம்மார்கம் குருசிஷ்ய பாவத்தை உணர்த்துவது .
12.குரு , லிங்க , சங்கம வழிபாடு என்றால் என்ன ?
சிவபெருமான் திருவடி நீழலைச் சென்றடைவதற்குரிய பல மார்க்கங்களில் குரு லிங்க சங்கம வழிப்பாட்டு நெறிகளும் குறிப்பிடத்தக்கனவாகும் .
1.குரு வழிப்பாடுகுருவை தரிசித்தலும் , குருவின் திருநாமத்தைச் செப்புதலும் , உபதேசத்தை கேட்டலும் , அவர் தம் அறிவுரையை சிந்தித்தலும் ஆகும் .
2.இலிங் வழிப்பாடுசிவபெருமானுடைய அருவுருவமாகிய சிவலிங்கத்தைவழிபடுதலாகும் .
3.சங்கம வழிப்பாடுசிவனடியார்களை சிவமாகவே கருதி வணங்கி வழிப்படுதல்.
13.தீக்கை என்றால் என்ன ?
சைவகுருமார்களால் ஏனையோர்க்கு அளிக்கப் பெறும் சைவ சமய அங்கீகாரச் சடங்கே தீக்கை ஆகும் .
14. .தீக்கை எத்தனை வகைப்படும் ?’
சமயதீக்கை ,விசேசதீக்கை ,நிர்வாணதீக்கை ,ஆச்சார்யதீக்கை என நான்கு வகைப்படும்.
15.சைவ சமயத்தின் சிறந்த நூல்கள் யாவை?
தோத்திரமும் , சாத்திரமும் சைவத்தின் இரு கண்கள் போன்றது .
16. தோத்திரம் என்றால் என்ன ?
சிவபெருமானின் புகழைப் போற்றித்துதித்து நாயன்மார்களும் அடியார்களும் பாடியுள்ள பாடலகள் தோத்திரம் அல்லது திருமுறைகள் எனப்படும் .
17. திருமுறைகள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
திருமுறைகள் பன்னிரன்டு வகைப்படும் , அவை முதலாம் திருமுறைமுதல் பன்னிரன்டாம் திருமுறைவரை பெயர் சொல்லி வ.ழங்கப்படும் .
18.திருஞானசம்பந்தர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?
முதல் மூன்று திருமுறைகள்.
திருஞானசம்பந்தர்

19.திருநாவுக்கரசர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?
நான்கு , ஐந்து , ஆறாம் திருமுறைகள்.
திருநாவுக்கரசர்

20.சுந்தரர் அருளிச் செய்தவை எத்தனை திருமுறைகள் ?
ஏழாம் திருமுறைஆகும் .
சுந்தரர்

21.எட்டாம் திருமுறை யாவது யாது ?
திருவாசகமும் , திருக்கோவையாரும் அருளியவர் மாணிக்கவாசகர் .
மாணிக்கவாசகர்

22.திருவாசகத்தின் பெருமை என்ன ?
மாணிகவாசகர் அருள சிவபெருமான் அதனைத்தன் திருக்கரங்களினால் எழதிக் கையொப்பமிட்டுவைத்தவை திருவாசகப்பாடல்கள் .
23.ஒன்பதாம் திருமுறை எதைக் குறிக்கும் ?
திருவிசைப்பா , திருப்பல்லாண்டைக்குறிக்கும் .
24. ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்கள் யாவர் ?
திருமாளிகைத்தேவர் , சேர்ந்தனார் , கருவூர்தேவர் , பூந்துருத்திகாடவநம்பி , கண்டராதித்தர் ,வேணாட்டிகள் , திருவாலிஅமுதனார் , புருடோத்தமநம்பி ,சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர் .
 
25. பத்தாம் திருமுறை யாவது யாது ?
திருமூலர் அருளிச் செய்துள்ள திருமந்திரம் .
26. பதினோராம் திருமுறையாவது யாது ?
சைவ சமயப் பிரபந்தத்திரட்டு என இருபத்திரண்டு வகைசிற்றிலக்கியங்களால் ஆனது .
27. பதினோராம் திருமுறையின் ஆசிரியர்கள் யாவர் ?
திருவாலவாயுடையார் , காரைகாலம்மையார் , ஐயடிகள் காடவர்கோன் , சேரமான் பெருமான்நாயன்னார் , நக்கீரதேவர் , கல்லாடதேவர் , கபிலதேவர் , பரணதேவர் , இளம் பெருமானடிகள் , அதிராவடிகள் , பட்டினத்து அடிகள் , நம்பியாண்டார்நம்பிகள் .
காரைகாலம்மையார்

சேரமான் பெருமான்நாயன்னார்

28.பதினோரம் திருமுறையின் சிறப்பு என்ன ?
தமிழ்சங்கத் தலைமைப் புலவரான சோமசுந்தரக்கடவுள் பாணபத்திரக்காக சேரமன்னுக்கு வரைந்த திருமுகப்பாசுரம் இடம் பெற்றுள்ளது , திருமறைகள் பாடியவர்களில்ஒரேபெண்புலவரான காரைக்கால் அம்மையாரின் பதிகங்களைப் பெற்றது .
29.பன்னிரண்டாம் திருமுறையாவது யாது ? அதை பாடியவர் யார் ?
பன்னிரண்டாம் திருமுறைபெரியபுராணம்ஆகும் . இதை பாடியவர் சேக்கிழார் .
சேக்கிழார்

30.சாத்திரங்கள் என்றால் என்ன ? அவை எத்தனை ?
சைவ சித்தாந்த முப்பெரும் உண்மைகளை கூறும் நூல்கள் சாத்திரங்களாகும் அவை பதிநான்கு .
31. பதிநான்கு . சாத்திர நூல்கள் எவை ? அதன் ஆசிரியர் யார் யார் ?
1.திருவுந்தியார்திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் .
2.திருக்களிற்றுப்பாடியார்திருகடவூர் உய்யவந்த தேவநாயனார் .
3.ஞானபோதம்மெய்கண்டார் .
4.சிவஞானசித்தியார்அருணந்தி சிவாச்சாரியார் .
5.இருபாஇருபது - அருணந்தி சிவாச்சாரியார் .
6.உண்மை விளக்கம்திருவதிகைமனவாசகம்கடந்தார்.
7.சிவப்பிரகாசம் - உமாபதிசிவம்
8.திருவருட்பயன் - உமாபதிசிவம்
9.வினாவெண்பா - உமாபதிசிவம்
10.போற்றிப்பஃறொடை - உமாபதிசிவம்
11.கொடிக்கவி - உமாபதிசிவம்
12.நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவம்
13.உண்மை நெறி விளக்கம் - உமாபதிசிவம்
14.சங்கற்ப நிராகரணம் உமாபதிசிவம்
32.சைவசமயத்தில் சிறந்து விளங்கிய அருளாளர்கள் யாவர் ?
அறுபத்து மூன்று நாயன்மார்களும் சைவத்தில் சிறந்த அருளாளர்களாக விளங்கினார்கள் .

தொகுக்க உதவிய நூல்கள் : சைவ சமயக்கலைக்களஞ்சியம், சைவசமய தோத்திர வினாவிடை , முனைவர் சிவ. திருச்சிற்றம்பலம்
சைவ சமயக்கல்வி - தருமபுர ஆதீனம்,
சைவ சமய வரலாறும் பன்னிரு திருமுறை வரலாறும் - திரு. கு. வைத்தியநாதன்

Friday 16 November 2012

தசாவதாரம்: Kamal Haasan & his "Naked" Lies!!


தசாவதாரம் பத்திப் பல பேரு பல விதமா பலப்பல பதிவு போட்டிருக்காங்க! அதுலயும் இந்தக் "கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது" பாட்டு பிச்சிக்கிட்டுப் போகுது! ச்சே இந்த மீஜிக் ஆல்பம் வெளியிடற நேரம் பார்த்து நான் சென்னையில் இல்லாமப் போயிட்டேன்! இருந்திருந்தா இந்தப் பாட்டில் சொல்லி இருக்குற பல பொய்களுக்கு ஜாக்கிசானோடவும் கமலோடவும் சும்மாப் பறந்து பறந்து சண்டை போட்டிருப்பேன்! :-)

Naked Truth தெரியும்ங்க! அதென்ன Naked Lie? - ஹிஹி! எல்லாம் கமலுக்குப் புடிச்சமான இஷ்டைல் தாங்க!
நண்பர், பதிவர் அனந்த லோகநாதன், இந்தப் படத்தில் வரும் பெருமாளின் பக்திப் பாடல்களைக் கேட்கும் போது அடியேனை நினைத்துக் கொண்டாராம்! Haunting Effect-ஆ? மின்னஞ்சல் அனுப்பி இருந்தாரு! எல்லாம் மாதவிப் பந்தல் மயக்கம்! மாதவி இப்பிடி எல்லாம் கூட மயக்கி வச்சிருக்காளா? :-))

விசயத்துக்கு வருவோம்! பாடலின் வரிகள் அனைத்தும் அருமை! நடு நடுவில் பல்லாண்டு பாசுரம் எல்லாம் ஹை பிட்ச்சில் போட்டுக் கலக்கித் தான் இருக்கீங்க!
திருவரங்கத்துக் கவிஞராம்-ல வாலி?
//இராஜலஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
//
அப்படியே கமலோட அம்மா அப்பா பேரையும் பாட்டுல கொண்டு வந்துட்டாரு பாருங்க! சும்மா கேட்டுக் கிட்டே படிங்க மக்கா!

ஆனா அதுக்கப்பறம் தான் கலந்துகட்டி ஒரே பொய்யா வெளயாடி இருக்காருப்பா வாலி! பாட்டை மேலோட்டமா பார்க்கும் போது அத்தனையும் தத்துவ வரிகள் தான்!
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது; கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது = இது ஓக்கே!
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது; தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது = இங்கிட்டு தான் லேசா இடிக்குது!

ஏன்?.......வைணவம் என்று பார்த்தால் மட்டும் தெய்வம் தெரியாது; தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது-ன்னு கூட மாற்றிப் பாடலாமே?

ஆனால் படத்தோட காட்சிக்கு ஏற்றாற் போலத் தான் பாட்டு எழுத முடியும் இல்லையா? படத்துல ஒரு சைவ அரசனும் (குலோத்துங்கன்), பல சைவர்களும் சேர்ந்து, தில்லை வைணவன் ஒருவனுக்குத் (ரங்கராஜ நம்பி) தண்டனையை நிறைவேற்றுவது போல் காட்சி! அதுனால காட்சிக்கு ஏத்தா மாதிரி வாலி எழுதிட்டாரு-னனு சொல்லி எஸ்கேப் ஆயிறலாம்! ஆனால் நம்ம கமல் எஸ்கேப்பு ஆக முடியுமா?



அது என்ன காட்சி-ன்னு பார்த்தா, பத்மஸ்ரீ கமலஹாசன், சொல்லியுள்ள-செய்துள்ள பொய்கள் அப்பட்டமாகத் தெரிய வரும்!
கவிதைக்குப் பொய் அழகு! - ஆனால் வரலாற்றைத் தொடர்பு படுத்திக் காட்டும் ஒரு திரைக் கதைக்குப் பொய் அழகல்ல!
வைணவ இலக்கியங்களை ஓரளவு அறிந்தவன் என்கிற முறையில், உங்களுடன் இந்தப் பின்னணியைப் பகிர்ந்து கொள்கிறேன்! மாற்றுக் கருத்துக்கள், தரவுகள் (ஆதாரங்கள்) இருந்தால் தட்டாமல் சொல்லவும்!


மொதல்ல கமலின் படக் காட்சியைப் பார்ப்போம்: (இன்னும் படம் வெளி வராததால், ஊடகங்களில் கிடைக்கும் கதையின் கருவை அடிப்படையாகக் கொண்டும், படத்தின் கலைஞர்கள் கொடுக்கும் நேர்காணலைக் கொண்டும் தான் எழுதுகிறேன். படத்தின் ஆர்ட் டைரக்டர் கூட, ரங்கராஜ நம்பி என்ற பாத்திரம் உண்மையானது என்று தான் பேட்டியில் குறிப்பிடுகிறார்! கேளுங்க :-)



***கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது - ஹரிஹரனின் கணீர்க் குரலில் ஆரம்பிக்கிறது தெறித்து விழும் வாலியின் தத்துவார்த்தமான வரிகள்.
இசை: மும்பையிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா.
இந்தப் பாடல் காட்சியை படு பிரமாண்டமாக அமைத்திருகிறார்கள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையிலான பரஸ்பர பகையின் பின்னணியில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் தில்லை கோவிந்தராஜப் பெருமாளை நடராசர் ஆலயத்தில் இருந்து பெயர்த்து எடுத்து கடலில் வீசி எறியும் காட்சி!

ஆஜானுபாகுவாக பஞ்சகச்சத்துடன் சட்டை போடாமல் திருநாமத்துடன் நிற்கும் கமலைக் (ரங்கராஜ நம்பி) கொக்கியால் இரண்டு கைகளிலும் கால்களிலும் குத்தி, ஒரு கிரேனில் கொடூரமாகத் தொங்கவிடுகிறார்கள் சைவர்கள்.
அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையின் மீது கம்பீரமாக வரும் சைவ மன்னரான நெப்போலியனின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொடூரம் நடக்கிறது.

ஒரு பக்கம் ஏராளமான வைணவர்கள் செய்வதறியாமல் திகைக்க, இன்னொருபுறம் கமலின் மனைவியான அஸின் (அட! புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!!!!!) கதற...
கிரேன் வேகமாக கடற்கரையில் நகர்கிறது. உயரத்தில் தொங்கும் கமல் மீது அம்புகள் வேறு சரமாரியாக விடப்படுகின்றன. சற்று நேரத்தில் ஒரு சிலையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கமல் நடுக்கடலில் தூக்கி வீசப்படுகிறார்.

உடம்பை உலுக்கும் காட்சி! பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால்,
சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட...அவரும் கமல்! காட்சிக்கு ஏற்றவாறு தசைகளை முறுக்கேற்றும்படி பாடியிருக்கிறார் ஹரிஹரன்! (*** வரிகளுக்கு நன்றி: tamilnadutalk.com)

ஆகக் கூடி...இது போன்ற ஒரு காட்சிக்கு வலு சேர்க்கும் பாடல் தான் அது! அதான் வீர வரிகள்!
வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது!
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது!


இப்போ உண்மையான கதை என்னன்னும் கொஞ்சம் பார்ப்போம், வாங்க!
இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்துல, அவனை மூளைச் சலவை செய்து சில சைவர்கள் போட்ட ஆட்டம்! அதுல பாவம், அப்பாவி சைவ-வைணவர்களிடையே சமயப் பூசலாய் போய் விட்டது!

தில்லையில் நடராசர் ஆலயத்துக்கு உள்ளேயே திருச்சித்ரகூடம் என்னும் கோவிந்தராசப் பெருமாள் கோயிலும் இருக்கு! அங்கு பெருமாள், ஈசனின் நடனத்தைப் பார்த்துக் களிக்கும் கோலத்தில் இருக்காரு! அவர் மீது திருமங்கை ஆழ்வார் 32 பாசுரம் பாடியுள்ளார். அதுவும் சிவபெருமானுக்குப் பிடிச்சமான சங்கராபரண ராகத்தைப், பெருமாள் மீது பாடி, சமய ஒற்றுமையை வளர்த்து இருக்காங்க!

ஆனால் மூளை கெட்டுப் போயி, சோழன் கோவிந்தராசர் சிலையை வேரோடு பிடுங்கி, தில்லைக்குப் பக்கத்தில் உள்ள பிச்சாவரம் கடற்கரையில் மூழ்கடிக்க வைத்தான். இதை ஒட்டக்கூத்தரும் அவர் பாட்டுல சொல்லி இருக்காரு! அதனால் கோயிலைச் சுற்றி இருந்த வைணவக் குடும்பங்களுக்குப் பல தொல்லைகள்! பல சங்கடங்கள்!
- இது வரைக்கும் சரி!
ஆனா ரங்கராஜ நம்பி என்ற ஒருவரைக் (கமலஹாசன்) கொக்கி மாட்டி, அம்பு எய்து, சிலையோடு கட்டி, கடல்-ல தூக்கிப் போடுறது எல்லாம் கொஞ்சம் ஓவர் கற்பனை தான்!

ஏதோ Passion of the Christ போல படம் பண்ணனும் நெனச்சா அதுக்கேத்த மாதிரி ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கணும்! அதை வுட்டுப்போட்டு இப்படி எல்லாம் டகால்டி பண்ணக் கூடாது!

சொல்லப் போனா கடலில் கட்டித் தூக்கிப் போடுவது ஒரு சைவருக்கு நடந்த கொடுமை! பழுத்த சிவனடியார் அப்பர் சுவாமிகளைச் சமண அரசன் தூணில் கட்டிக் கடலில் தூக்கிப் போடுவான்! ஆனால் அவரு தப்பிச்சி வருவாரு!
கல்தூணைப் பூட்டிஓர் கடலிடைப் பாய்ச்சினும்
நல்துணை ஆவது நமச் சிவாயவே
- என்பது நாவுக்கரசர் தேவாரம்!
இப்படி அப்பர் சுவாமிகளுக்கு முன்னெப்போதோ நடந்ததை, நைசா ஒரு வைணவருக்கு ரீமிக்ஸ் பண்ணிக் காட்டுறது எல்லாம் ஓவரோ ஓவர் கமல் சார்!

கடலில் போட்ட கோவிந்தராசர் மூலவர் சிலை மூழ்கிப் போனது! ஆனால் உற்சவரின் சிலையை மட்டும் எப்படியோ காப்பாற்றிய வைணவக் குடும்பங்கள், அந்தச் சிலையை இராமானுசரிடம் சேர்பிக்கிறார்கள். சிலையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதே இடத்தில் வைத்தால் மீண்டும் பிரச்சனை தான்!

பிரச்சனை சிலைக்கா? இல்லையே!...அதைச் சுற்றியுள்ள அப்பாவி மக்களுக்குத் தானே! இதை நன்கு உணர்ந்த "உண்மையான" சமயத் துறவி அவர்! ஈகோ பார்க்காமல் சிலையைக் கொண்டு போய், கீழ்த் திருப்பதியில் நிறுவுகிறார்! அங்கு புதிதாகக் கோவிந்தராசப் பெருமாள் ஆலயம் ஒன்றை எழுப்புகிறார்! இன்றளவும் கீழ்த் திருப்பதியில் இருப்பது தில்லை கோவிந்தராசரின் உற்சவரே!

ஆண்டுகள் உருண்டோட சோழன் மறைகிறான்! நல்லிணக்கம் நிலவும் போது, புதிதாக மூலவர்-உற்சவர் சிலைகளைச் செய்து மீண்டும் தில்லையில் இருந்த இடத்திலேயே,(சில தீட்சிதர்கள் எதிர்ப்பையும் மீறி) நிறுவுகிறார்கள்! இன்றும் தில்லை நடராசப் பெருமான் ஆலயத்துக்குள் கோவிந்தராசரும் பள்ளி கொண்டுள்ளார்! - கதை இம்புட்டு தான்!

நானும் பல நம்பிகளைப் பற்றிப் படிச்சிருக்கேன் கமல் சார்!
குருகூர் நம்பி, வடுக நம்பி, பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமலை நம்பி, உத்தம நம்பி, திருக்குறுங்குடி நம்பி-ன்னு இந்த நம்பி லிஸ்ட் நீளம் தானுங்கோ!
ஆனா நீங்க சொல்லுற ரங்கராஜ நம்பி எங்கேயும் வரலீங்கோ! சாமி படத்துல கோயில் பட்டாச்சாரியாரா வர்ற விவேக் டயலாக் ஞாபகம் வச்சிக்கோங்கோ :-)

(இரண்டாம் குலோத்துங்கன் தில்லையில் செய்தது இவ்வளவு தான்! சோழன் கொடுமைகள் எல்லாம் திருவரங்கத்தில் தான்! இராமானுசரை கர்நாடக மாநிலம் மேலக்கோட்டைக்கு ஓட ஓட விரட்டியது, அவருடைய வயதான குரு பெரிய நம்பிகள், மற்றும் இளையவரான சீடர் கூரத்தாழ்வான் - இருவரின் கண்களைப் பிடுங்கிய பயங்கரம், பின்னர் சோழனே கிருமி நோய் கண்டு "கிருமி கண்ட சோழனாய்" செத்தது எல்லாம் தனிக்கதை! அதற்கும் தசாவதாரம் கதைக்கும் தொடர்பில்லை!)


போதாக்குறைக்கு பொன்னுசாமின்னு, கடைசீல பார்த்தா இந்தப் பாட்டு விக்ரம் நடிச்ச மலையாளப் படத்தின் சினிமா-காரம்-காப்பியாம்! அட தேவுடா! இந்தாப் பாருங்க :-)


பத்மஸ்ரீ, உலக நாயகன், கமலஹாசன் அவர்களே!
கலைக்கு அழகு கற்பனை தான்! இல்லை-ன்னு சொல்லலை! பொன்னியின் செல்வன் நாவலில் கூட சுவைக்காகச் சில கற்பனைகளைச் செய்வார் கல்கி! ஆனால் கதையின் போக்கு வரலாற்றின் போக்கோடு முட்டிக் கொள்ளாது செய்வார். அதை முன்னுரையில் சொல்லியும் விடுவார்!

இன்றைய காலகட்டத்தில் சைவ வைணவச் சண்டைகள் எல்லாம் ஒன்னும் கிடையாது! இது போன்ற ஒரு சூழலில், நடக்காத ஒன்றை நடந்ததாகக் காட்டுவது என்பது சரியே அல்ல!
சும்மா கதை தானே என்று சொல்லாதீர்கள்! தில்லைக் கோவிந்தராசர் சிலையைக் கடலில் மூழ்கடித்தது உண்மை தானே! அதையும் தானே படத்தில் காட்டி உள்ளீர்கள்!
அதனுடன் ஆளையும் சேர்த்து படுபயங்கரமாகக் கொன்றார்கள் என்று பொய்யை உண்மையுடன் கலக்குவது எல்லாம் வரலாற்றைச் சிதைப்பதாகும்!
அதுவும் சினிமா போன்ற சக்தி வாய்ந்த ஊடகத்தில் சொல்லப்படும் காட்சிகளுக்கு, வரலாற்றுப் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதை விட எஃபெக்ட்டு ஜாஸ்தி!
வேண்டாம் இந்த விபரீதப் போக்கு!
நீங்க தான் உங்களை ஒரு பகுத்தறியும் Agnostic என்று பேட்டிகளில் சொல்லிக் கொள்வீர்களே! அப்புறம் உள்ளூர மட்டும் ஏன் இந்த பொய்யான வைணவ பாசம்?

அப்படி மெய்யாலுமே நீங்கள் தொண்டு செய்ய ஆசைப்பட்டால் அதுக்கு உண்மையான பல நல்ல சம்பவங்கள் நடந்திருக்கு! மனித நேயத் தொண்டுகள் இருக்கு! உயிரையும் பொருட்படுத்தாது, தமிழை ஆலயத்துக்குள் முன்னிறுத்திக் காட்டிய வைணவக் கதைகள் இருக்கு!
தந்தை பெரியாருக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே, ஸோ கால்டு கீழ்க்குலத்தாரை, ஆலயத்துக்குள் அழைத்துச் சென்ற கதை இருக்கு! அதை எடுங்க!

அதை விடுத்து இப்படி எல்லாம் பொய் சொல்லிச் சைக்கிள் கேப்பில் வைணவம் வளர வேண்டிய அவசியம் இல்லவே இல்லை! :-)

படம் பிரம்மாண்டமா வருது-ன்னு நினைக்கிறேன்! பாடல் காட்சிகள், கதைக் களம் எல்லாரும் ஆகா ஓகோ என்று பேசுகிறார்கள்! உங்கள் காசெட் வெளியீட்டு விழாவில் முதல்வர் கலைஞர், உடையவர் இராமானுசரின் கொள்கைகளைப் புகழ்ந்து பேசுகிறார்!
இப்படி எல்லாமே நல்லா இருக்கும் போது, இந்த வரலாறு திரித்தல் என்னும் திருஷ்டி மட்டும் தேவையா?

படத்தின் துவக்கத்தில் அந்த ரங்கராஜ நம்பி பாத்திரப் படைப்பு கற்பனையே என்று போட்டு விடுங்கள்!
இல்லை...இல்லை ரங்கராஜ நம்பி என்பவர் உண்மை தான்; சைவர்கள் அவரைக் கொடுமைப் படுத்திக் கடலில் சாய்த்தார்கள் என்று நீங்கள் கருதினால், அதற்கான ஆதாரங்களைத் தமிழ் மக்கள் முன் வைக்க நீங்கள் கடமைப்பட்டு உள்ளீர்கள்!

மற்றபடி உங்க பிரம்மாண்டமான படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
(Pic Courtesy: http://dasavatharamthefilm.blogspot.com/)

சிவலிங்கம்

source http://madhavipanthal.blogspot.in/2008/06/blog-post.html

அலுவலகத்தில் Puerto Rico நாட்டு நண்பி ஒருத்தி! ரொம்ப இனிமையான பொண்ணு! அவளுக்கு நம்மூரு குழந்தைக் கண்ணன் மேலேயும், பிள்ளையார் சிலை மேலேயும் கொள்ளை ஆசை! (ஐயோ, என்னைய மொறைச்சிப் பாக்காதீங்க! நான் யாரையும் மதம் மாத்தல! :-)

இந்தியப் பயணம் முடிஞ்சி நான் வரும் போதெல்லாம் அவளுக்கு குட்டி குட்டிப் பிள்ளையார் சிலையும், கண்ணன் சிலையும் வாங்கிக்கிட்டு வரணும்! இல்லீன்னா மொக்கை போட்டே ஆளை மூழ்கடிச்சுருவா! அடுக்கடுக்கா கேள்வி கேட்கறதுல நம்ம வெட்டிப்பயலை விட நிபுணி! ஆனா நம்ம கப்பி அளவுக்கு எல்லாம் ஞானம் கெடையாது-ன்னு வச்சிக்குங்களேன்!
இரு புள்ள, உன்னைய அடுத்த ஆப்புரைசல்ல கவனிச்சிக்கிறேன்! :-)

அப்பிடித் தான் அன்னிக்கி மதியம் திடுதிப்புன்னு ஓடியாந்து என் அறைக்குள்ளாற நிக்குறா! என்னம்மா கண்ணு செளக்கியமா?-ன்னு கேட்டேன்! "Hey Raavi"-ன்னு ராவினா! "Tell me one thing! நீங்க கும்புடுறீங்களே சிவலிங்கம்! அது "அதையா" குறிக்கிறது??? Someone told me! I just cant believe this!"

"யாரு புள்ள ஒனக்கு இப்பிடி எல்லாம் தப்பு தப்பாச் சொன்னா? கண்ட தமிழ் சினிமா ஏதாச்சும் பாத்தியா என்ன? இல்ல கண்ட கண்ட புஸ்தகத்தை எல்லாம் படிக்கறீயா? Too bad (sweet name)!"

"ச்சீ...இல்லப்பா, நேத்து நியூயார்க் Lincoln Center-ல ஒரு கூட்டம். அதுல மார்க் டூலின் மகராஜ் தான் இப்பிடிச் சொன்னாரு! அப்பவே எனக்கு நீ தான் ஞாபகம் வந்த! அதான் ஒன்னையவே கேட்கலாம்-னு...."

"கிழிஞ்சுது கிருஷ்ணகிரி! ஒடைஞ்சுது ஒக்கனேக்கல்! இப்பிடி யாரோ ஒரு வெள்ளைக்காரன் அரையும் கொறையுமாச் சொல்லிக்கிட்டுத் திரியிறானா? பேரைப் பாரு! மார்க் டூலின், மாங்கா ஃபாலிங்-ன்னு!"

"ஓ! அப்போ அது உண்மை இல்லியா? அப்பிடின்னா உனக்கு உண்மையான விளக்கம் தெரியுமா? ஏய், எனக்குச் சொல்லேன், சொல்லேன்! ப்ளீஸ்!"

"சாரி...அதெல்லாம் பதிவுல மட்டும் தான் சொல்லுவேன்! I am a blogger u know? உனக்கு விளக்கம் வேணும்னா, meet me in மாதவிப் பந்தல்! ஓக்கே?" :-)




லிங்கம் என்றால் "SYMBOL", (or) "குறியீடு" என்று பொருள்!
சிவ-லிங்கம் என்றால் சிவ-குறியீடு! Siva-Symbol! சிவபெருமானைக் குறிக்கும் சின்னம்! அம்புட்டு தான்!

படம் வரைந்து பாகங்களைக் "குறி" என்று சொல்லும் போது நமக்கு ஒன்னும் அப்படித் தோனுவதில்லையே! அப்புறம் ஏன் "லிங்கம்" என்று சொல்லும் போது மட்டும் இப்படி?

சிவ-லிங்கம் என்பது சிவ-குறியீடு! இதுக்கு மேல சொல்லுறது எல்லாம் வெள்ளைக்காரவுங்களின் அதீதக் கற்பனை!
நாமளும் ஆங்கிலேய விளக்கத்தைக் கேட்டு விட்டு, விம் பவுடர், சபீனா பவுடர் போட்டு இன்னும் வெளக்கு வெளக்குன்னு வெளக்கிட்டோம்! :-)

சிவலிங்கம் பற்றிய ஒரு பொய்யை, ஓராயிரம் புத்தகமாப் போட்டு amazon.com-இல் துரைமார்களோ இல்லை நம்மூர் high profile சாமியார்களோ வெளியிட்டுருவாங்க! அதைப் படிச்சிட்டு, நமக்கே சந்தேகம் வரும் நிலை வந்துடிச்சிப் பார்த்தீங்களா? போதாக்குறைக்கு தமிழ் சினிமாவின் மகத்துவம்!

முதலிரவுக் காட்சிகளில்...அப்பிடீ ஒரு சைடுல...சிவலிங்கத்தைக் காட்டுவாங்க! எந்தப் படம்-பா அது? கார்த்திக்-ரஞ்சிதா-ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு லவ் ஸ்டோரி!
ரொம்ப அறிவாளித்தனமா, இலை மறை காய் மறையாச் சொல்லிட்டதா இயக்குனர் பெருமை பட்டுக்கிடுவாரு! நம்ம கமல் சாரும் இன்னும் சில இயக்குனர்களும் பல படங்களில் இந்த "டெக்னிக்"கைப் பயன்படுத்தி இருக்காங்க! :-)

சிவலிங்கம் பார்க்க "அப்பிடி" இருக்கோ இல்லையோ, இப்படிச் சொல்லிச் சொல்லி, "அப்பிடியே" பார்க்க நாமளும் பழகிக்கிட்டோம்!
அட ஆமாம்-ல! "அப்பிடித் தான்-ல" இருக்கு; நம்ம முன்னோர்கள் எல்லாரும் படா கில்லாடியா இருந்திருக்காங்கப்பா-ன்னு கல்லூரி நண்பர்கள் கூட நமட்டுச் சிரிப்பு சிரிச்சிக்கிட்டு Time Pass ஆகும்! இத வச்சியே கல்லூரியில் கும்மி அடிக்கும் அதி தீவிர சிவபக்த குழாங்களும் உண்டு! :-)

சிவ-லிங்கம் என்றால் சிவக்-குறியீடு-ன்னு பார்த்தோம்!
ஏன் அப்படி ஒரு லிங்க வடிவம்? அந்த வடிவத்தில் என்ன தான் சொல்ல வராங்க என்பதைக் கொஞ்சம் எளிமையா, எல்லாருக்கும் புரியிறா மாதிரி பார்க்கலாமா இன்னிக்கி?



இறைவனைப் பரப்பிரம்மம் என்று சொல்வதுண்டு! எதையும் கடந்து நிற்பவன் பரம்=கடவுள்!


* ஹீரோ போல, முருகனும் கண்ணனும் அழகாகச் சிரித்தால் = உருவம்!
* உருவமே இல்லாத, குறியீடே இல்லாத, ஏதோ ஒரு சக்தி நிலை = அருவம்!
* உருவமும் உண்டு, அருவமும் உண்டு! (அ) உருவமும் இல்லை, அருவமும் இல்லை = அப்பிடின்னா அதுக்குப் பேரு என்னா? = அருவுருவம்!

சிவலிங்கம் என்பது அருவுருவம்!

உருவமாகப் பார்த்தால் இறைவனும் மனுசனைப் போலத் தான்! கை கால் காது மூக்கு-ன்னு எல்லாம் கடவுளுக்கும் இருக்கும் போல! காதுல பாட்டு கேப்பாரா? மூக்குல மூச்சு விடுவாரா-ன்னு நெனச்சிக்குவோம்!

"உருவம்-னா வெறும் மனுச உருவம் மட்டும் தானா? மரம், செடி, விலங்கு, பறவை எல்லாம் கூட உருவம் தான்! அந்த உருவத்துல எல்லாம் கடவுள் இருக்க மாட்டாரா?"-ன்னு சில பேரு குறுக்குக் கேள்வி கேப்பாங்க!
ஹிஹி! அதான் தண்டகாரண்யத்து மரமாய், மீனமாய், ஆமையாய், வராகமாய், நரசிம்மமாய், வாமன-ராம-கண்ணன்னு மனுசன்களாய் பல உருவத்தில் இறைவனைக் காட்டினாங்க!

சரி...உருவம் பற்றிச் சொன்னீங்க! இறைவன் அருவமாகவும் இருக்காருன்னு சொல்லிக் கன்பூசன் பண்ணுறாங்களே!
உருவமே கெடையாதுன்னு சொல்லுறத நம்புறதா?
உருவமா இருக்குறத நம்புறதா? எதைப்பா நம்புறது?


ஹிஹி! கேள்வி எல்லாம் நல்லாத் தான் கேக்குறீங்க! கேள்விக்குப் பதில், இன்னொரு கேள்வி தான்!
தண்ணி உருவமா? அருவமா? இதுக்குப் பதில் சொல்லுங்க பார்ப்போம்!

* நீராவியா இருந்தா = அருவம்! கண்ணுக்குத் தெரியாது!
* பாத்திரத்துல புடிச்சி வச்சா = உருவம்! கண்ணுக்குத் தெரியும்!
எந்தப் பாத்திரத்துல தண்ணியைப் பிடிக்கறோமோ, அந்த உருவத்தையே தண்ணியும் எடுத்துக்குது-ல்ல? அதே போலத் தான் இறைவனும்!

கோயில்-ல ஏன் தீர்த்தம் கொடுக்கறாங்க-ன்னு முன்னாடி ஒரு சுப்ரபாதப் பதிவுல சொன்னேன்! ஞாபகம் இருக்கா?
நாராயணன்-நாரம் என்பது நீர்! = நாரம் + அயணம்
இறைவன் நீரைப் போலவே அருவமாகவும் இருக்கிறான்! பிடித்து வைத்த பாத்திரத்தில் உருவமாகவும் இருக்கிறான்!


இறைவன் உருவமாய் இருக்கலாம்! ஆனால் உருவம் மட்டுமே இறைவன் இல்லை!
இறைவன் அருவமாய் இருக்கலாம்! ஆனால் அருவம் மட்டுமே இறைவன் இல்லை!

இதை அவ்வப்போது நாம் உணர்ந்து கொள்ளணும்! அதுக்குத் தான் உருவமும் இல்லாத, அருவமும் இல்லாத....அருவுருவம் என்னும் ஒரு குறியீடு!

வைணவ ஆலயங்களில் தீர்த்தம் என்பது ஒரு அருவுருவம்!
அதே போல் சைவ ஆலயங்களில் லிங்கம் என்பது அருவுருவம்!


லிங்க உருவத்தைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருங்கள்! மனம் குவியும்! அதன் Geometry அப்படி!
எப்படி மேலைநாடுகளில் Crystal Gazing-இல் மனத்தை ஒருமைப் படுத்துகிறார்களோ, அதே போல் வழிபாடு/ தியான முறைகளுக்குப் பயன்படுத்துவதற்கு சிவலிங்க உருவம் நம் பண்பாட்டில் அமையப் பெற்றது!

சிவபெருமான், யோகி மற்றும் குரு வடிவானவர்! எனவே அவரைக் குறிக்கும் லிங்கமும் யோகம் மற்றும் தியான வடிவமாக இருக்கு!

லிங்கம்=லிங்+கம்
*லிங்=லியதே=எல்லாப் பொருளும் அங்கு லயிப்பது, ஒன்றுபடுவது! (merge)
*கம்=கமயதே=எல்லாப் பொருளும் அங்கிருந்தே எழுவது! (emerge)
இப்படி merge-emerge, ஒடுங்கி-எழுவது தான் சிவலிங்க சொரூபம்!

சிவலிங்கம் பற்றிய பல குறிப்புகள் லிங்க புராணத்தில் சொல்லப்படுகின்றன. சிவ புராணம், ஸ்கந்த புராணம் எல்லாவற்றிலும் லிங்கம் குறித்த கதைகள் உள்ளன.

துர்வாச முனிவரின் சாபத்தினால் ஈசனுக்கு உருவம் இல்லாத லிங்க வழிபாடு,
ப்ரம்மனும் விஷ்ணுவும் அடி முடி காணாத அளவுக்கு ஓங்கிய தீப்பிழம்பு தான் லிங்க உருவம் ஆனது
....என்று பல "புராணக் கதைகள்" வழங்கினாலும், அவையெல்லாம் வெறும் கதைகளே!

ஆனால், லிங்கம் என்பது மிக உயர்ந்த அருவுருவக் குறியீடு என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை!

பிரதானம் பிரகருதிர் யதாஹுர் லிங்கம் உத்தமம்
கந்த, வர்ண, ரசாஹிர், சப்த, ஸ்பரிசதி வர்ஜிதம்

வாசனை, நிறம், சுவை, ஓசை, தீண்டல் என்று எல்லாம் கடந்த குறியீடாகச் சிவலிங்கத்தைச் சொல்கிறது!

திருமூலர் லிங்க வடிவம் ஏன் என்பதைப் பல அழகிய தமிழ்ப் பாடல்களில் விளக்குகிறார்!
இலிங்கம தாவது யாரும் அறியார்
இலிங்கம தாவது எண்டிசை எல்லாம்
இலிங்கம தாவது எண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்தது உலகே!

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே என்பது புகழ் பெற்ற திருமந்திரம்!

இது வரைக்கும் சொன்னது புரிஞ்சுதோ புரியலையோ, 
சிவலிங்கம் "அதை"க் குறிக்கவில்லை என்பது மட்டுமாவது புரிஞ்சிருக்கும்-னு நினைக்கிறேன்! :-)
வாங்க சிவலிங்கத்தின் அமைப்பைக் கொஞ்சம் பார்க்கலாம்!



சிவலிங்கத்தில் சிவபெருமான் மட்டுமில்லை! மும்மூர்த்திகளும் இருக்காங்க!

* லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பீடம் = வட்ட வடிவம்!
* அதன் மத்திய பாகம் விஷ்ணு பீடம் = கூம்பு (cone) வடிவம்!
அலங்காரம் செய்யப்பட்டிருந்தால், சிவாலயங்களில் இவை இரண்டும் சட்டென்று நம் கண்ணுக்குத் தெரியாது!

அதற்கு மேல் எல்லாரும் காண்பது தான் சிவ-சக்தி பீடம்! இதுவே இரண்டு பாகமாக இருக்கும்!

* மேலே உருளையான (cylinder) பாகத்தைத் தான் லிங்கம் என்று சொல்லுவார்கள்! அது சிவ சொரூபம்!
* அதன் கீழ் பரந்த வட்ட வடிவமான (round) பாகத்தை ஆவுடையார் என்று வழங்குவார்கள்! அது சக்தி சொரூபம்!
பீடம் அம்பாயாம், சர்வம் சிவலிங்கஸ்ச சின்மயம் என்பது இதை விளக்கும் சிவ புராண மந்திரம்!

திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யும் போது, வழிந்தோடும் நீர் ஆவுடையார் வழியாகவே கொள்ளப்படும்!
ஆவுடையாருக்கு யோனி என்ற பெயரும் உண்டு!:)
இந்தப் பெயரே, இன்று பல விபரீத பொருட்களைச் சிவலிங்க தத்துவத்துக்குக் கற்பிக்கவும் காரணமாகவும் அமைந்து விட்டது!

யோனி என்பதற்கு வழி, இடம் என்பது பொருள்!
ஆத்ம யோனி ஸ்வயம் ஜாதோ, வைகான சம-காயனக
தேவகீ நந்தன ஸ்ரஷ்டா
-ன்னு விஷ்ணு சகஸ்ரநாமத்துல கூட "ஆத்ம யோனி"-ன்னு வரும்!
ஆத்ம யோனி-ன்னா ஆத்மா செல்லும் பாதை! இதுக்கு விபரீதமா என்ன பொருளைச் சொல்வீங்க? ஆத்மாவுக்கு ஏதுங்க "யோனி"? :-)

வடமொழியின் பல குறைபாடுகளுள் இதுவும் ஒன்று!பல பொருட்களையும் ஒரே சொல்லில் சொல்ல வந்தா இப்படித் தான் ஆகும்!
தமிழில் இது போன்ற பெரிய குறைபாடு இல்லை! ஒருபொருட் பன்மொழி-ன்னு எல்லாம் நல்ல வேளை இருக்கு!

நாற்றம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு மணம் என்று பொருள்! ஆனா இன்னிக்குப் பேச்சு வழக்கில அதுக்குப் பொருளே வேற! அது போலத் தான்!
நாற்றத் துழாய் முடி-ன்னு பாட்டில் வருதே! முகைமொக்குள் உள்ள நாற்றம் போல்-னு வள்ளுவர் கூடச் சொல்றாரு!

ச்சே...துர் நாற்றம் வீசும் மல்லி மொட்டு போலத் தான் காதலும் - அப்படின்னு வள்ளுவர் சொல்லுறாருப்பா - அப்பிடியா பொருள் கொள்வோம்? ஹிஹி! அன்னிக்கி என்ன பொருளில் வழங்கினாங்களோ, அப்பிடித் தானே எடுத்துக் கொள்வோம்? அதைப் போலவே தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்!


ஆவுடையார்=சக்தி பீடம், லிங்கம்=சிவ பீடம்-னு பார்த்தோம்!

ஆக்கல்-அளித்தல்-அழித்தல் என்னும் முத்தொழிலில்,
எல்லா உயிர்களும் ஆவுடையாரில்-சக்தியில் ஒடுங்கி (merge),
லிங்கத்தில்-சிவத்தில் விரியும் (emerge)!

= இது தாங்க எளிமையான சொற்களில் சிவலிங்க தத்துவம்!
இதுக்குத் தான் இத்தனை சொற் குழப்பம், வார்த்தை விளையாட்டு!

சிவலிங்கம் "அதைக்" குறிக்கவில்லை என்பதற்கு இன்னும் பல சான்றுகள் சொல்லி விளக்கலாம்!

எல்லாச் சிவலிங்கத்திலும் ஆவுடையார் (யோனி) இருக்காது!
மேல் பாகமான வெறும் லிங்கம் மட்டுமே கூட உண்டு!
நர்மதை நதியில் இயற்கையாகக் கிடைக்கும் பாணலிங்க கற்கள் இந்த வகையைச் சேர்ந்தது தான்! அந்தக் கற்களுக்கு மேல் பாகம் மட்டும் தான் இருக்கும்!

பகுத்தறிவுப் பாணியில் சொல்லனும்னா, நம்ம இராவணன் வழிபட்ட ஆத்ம லிங்கம் கூட இந்த வகை தான்!
இராவணன் தான் பெரிய மானஸ்தன் ஆயிற்றே! "அப்படி" எல்லாமா அவன் கடவுளை வழிபடுவான்? :-)

காளஹஸ்தியில் வெறும் ஆவுடையார் மட்டும் தான்! மேலே லிங்கமே இருக்காது!
வைத்தியநாதத்தில் லிங்கம் மட்டும் தான்! கீழே ஆவுடையாரே இருக்காது!

அப்போ லிங்கம்-யோனி-ன்னு தப்பு தப்பா வெள்ளைக்கார கனெக்சன் எல்லாம் கொடுக்க முடியாதே! அப்போ என்ன சொல்வீங்க? :-)

அடுத்த முறை ஆலயம் செல்லும் போது,
சிவலிங்க தத்துவம் மிகவும் உயர்ந்த தியான தத்துவம் என்பதை உணர்ந்து கொண்டு,
மன நிம்மதியுடன், மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
சஞ்சலமே தேவையில்லை! சங்கரமே தேவை!


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது!


அறி-யாதவர் கூறும் சொற்கள், அறியாச் சொற்களே!
அனைத்துக்கும் பரம்பொருளான பெருமாளே, தன் யோக நித்திரையின் போது, கைகளில் சிவலிங்கத்தை வைத்துக் கொள்கிறான்! ஒடுங்கி-விரியும் முத்தொழிலின் தத்துவத்தை உணர்த்தவே இப்படி!
பெருமாள் கையில் சிவலிங்கம் இருக்கும் இந்த அழகிய திருக்கோலத்தை இன்றும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் காணலாம்!

சைவ-வைணவத்தில் பேதமும் இல்லை!
சிவலிங்கம் என்பது வெறும் காமமும் இல்லை!


ஹரி ஓம்! சிவோஹம்!!


இந்தக் கடைசிப் பத்தி முழுதும் ஆங்கிலம் தான்! அந்தப் போர்ட்டோ ரிக்கோ பொண்ணுக்காக! meet u in மாதவிப் பந்தல்-ன்னு வேற சொல்லிட்டேன்! பாவம் அவளுக்காகக் கொஞ்சம் பொறுத்துக்க மாட்டீங்களா மக்கா? :-)

So, as to summarize from scriptures, The Siva Lingam is not "that" symbol.
It is a "form-formless" geometrical symbol to represent the yogic aspect of Siva!
Lingam = Lin+Gam = merge+emerge
Lin = Liyathe = That into which everything merges!
Gam = Gamayathe = That from which everything emerges!

Thats why the Lord Sriman Narayana, even in his yogic sleep, holds the Siva Lingam in his hand, for playing his cosmic sport of creation & deluge, merge & emerge! See for yourself....and next time....
when you hear that.... Siva Lingam means "that",
be assured....that’s not "that",
but more than "that"! :-)))